யாருக்கு ஜெயில்னு பார்ப்போம்.. மு.க.ஸ்டாலின் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சகட்ட மோதல்

சென்னை, நவ-4

விருதுநகர் மாவட்டத்தில் திமுக சிறப்பு தேர்தல் பொதுக்கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடுமையாக தாக்கி பேசினார். “அ.தி.மு.க. அரசில் அங்கம் வகிக்கக் கூடிய அமைச்சர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜியைச் சொன்னால் போதும். ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது; ஒரு அமைச்சர் எப்படி இருக்கக் கூடாது; ஒரு மனிதர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் ராஜேந்திர பாலாஜி! எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, ஆளும் கட்சியினர் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே உயிருக்கு பயப்படக் கூடிய அளவுக்கு அராஜகம் கொடி கட்டிப் பறக்கும் மாவட்டமாக இந்த விருதுநகர் உள்ளது.

வாயைத் திறந்தால், வெட்டிவிடுவேன், குத்திவிடுவேன், நாக்கை அறுப்பேன் என்பதுதான் ராஜேந்திர பாலாஜியின் பாணியாக உள்ளது. ஜெயலலிதா இருந்திருந்தால் இவரை ஒரு நாள்கூட பதவியில் வைத்திருக்க மாட்டார். ஜெயலலிதா இறந்ததால், தன்னை எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் முழு சங்கியாகவே மாறி ராஜேந்திர பாலாஜி செயல்பட்டு வருகிறார். இன்றில்லாவிட்டாலும் திமுக ஆட்சி அமைந்ததும் புழல் வாசம் செய்யப்போகும் மனிதர்தான் ராஜேந்திர பாலாஜி என்பதை அவருக்கும் அதிமுகவினருக்கும் நினைவுபடுத்துகிறேன்.” என்று மு.க. ஸ்டாலின் காட்டமாக விமர்சித்தார்.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ஊழல் குறித்து பேச கூடிய அருகதை மு.க. ஸ்டாலினுக்கு கிடையாது. ஒரு காலும் மு.க. ஸ்டாலினால் தமிழக முதல்வர் ஆக முடியாது. தேவர் ஜெயந்தி அன்று கொடுத்த திருநீறை கீழே தள்ளி விட்டு, அதை கொள்கை என ஸ்டாலின் சொல்கிறார். எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் ஸ்டாலின் இழக்க போகிறார். கடவுள் நம்பிக்கையைப் பொறுத்தவரை அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான். நாங்கள் சங்கி அல்ல. 5 ஆண்டுகள் நக்கி பிழைத்தது ஸ்டாலின்தான். சங்கி என்று சொல்பவர்களுக்கு திஹார் ஜெயில் தயாராக உள்ளது. விட்டால் ஸ்டாலின் எங்களையெல்லாம் சுட்டுக்கொன்று விடுவார் போலிருக்கிறது. ஒழுக்கமாகப் பேசினால் நாங்களும் ஒழுக்கமாக பேசுவோம். இல்லாவிட்டால் அசிங்கமாகப் பேசுவோம்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *