டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.
டெல்லி, நவ-4

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். வரும் வெள்ளிக்கிழமை வரை டெல்லியில் தங்கியிருந்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து ஆளுனர் பேச உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர் விடுதலை குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பற்றியும் பிரதமரிடம் ஆளுனர் விளக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை செயலாளரையும் சந்திக்க ஆளுனர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அவரது விடுதலை குறித்து தமிழக ஆளுநர் இரண்டாண்டுகளாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.