மாநகராட்சியின் சார்பில் சென்னையில் 3 நடமாடும் அம்மா உணவகங்கள் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை, நவ-4

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகிறது.இதையொட்டி கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது,ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களின் வசதிக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களில் 3 வேளையும் விலையில்லா உணவு வழங்க நடவடிக்கை எடுத்தார்.

தலைநகர் சென்னையிலுள்ள 200 வார்டுகளில், வார்டுக்கு இரண்டு வீதம் 400 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதுபோக, சென்ட்ரல் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட ஏழு அரசு மருத்துவமனைகளில் இயங்குவதையும் சேர்த்து மொத்தம் 407 அம்மா உணவகங்கள் சென்னையில் இயங்குகின்றன. இவை அனைத்திலும் ஊரடங்குகாலத்தில் 3 வேளையும் சுத்தமான வகையில் சுகாதாரமான விலையில்லா உணவு வழங்கப்பட்டது.இவை மூலம் ஒருநாளைக்கு சுமார் நான்கரை லட்சம்பேர் பயனடைந்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்களின் சேவை அனைவராலும் போற்றத்தக்க வகையில் அமைந்தது.

அம்மா உணவகங்களின் சேவையை மேலும் நவீனப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும், கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் பணியாளர்கள் பசியின்றி வேலை செய்யும் நோக்கில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று குறைந்த விலையில் உணவு வழங்க விரைவில் நடமாடும் அம்மா உணவகங்கள் சேவை தொடங்கப்படும் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை மாநகராட்சியின் சார்பில் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 நடமாடும் அம்மா உணவகங்கள் சேவையை தொடங்கி வைத்தார்.

முதல்கட்டமாக வடசென்னை,தென்சென்னை,மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் நடமாடும் அம்மா உணவகங்கள் சேவை தொடரும் என்றும் இந்த சேவை மற்றப்குதிகளிலும் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் சண்முகம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *