வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சியினர் சதி.. அதிபர் ட்ரம்ப் புகார்

வாஷிங்டன், நவ-4

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வெற்றி நிலவரம் குறித்த தகவல்கள் படிப்படியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வாக்குப்பதிவில் பல்வேறு நேரங்கள் பின்பற்றப்படுவதால் முடிவுகள் அறிவிக்கும் நேரமும் மாறுபடுகிறது. மெஜாரிட்டிக்கு 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி 237 வாக்குகள் பெற்று ஜோ பைடன் முன்னிலையில் உள்ளார். 210 வாக்குகளுடன் டிரம்ப் சற்று பின்தங்கி உள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைவான அளவே உள்ளது.

இருவரும் கிட்டத்தட்ட சம அளவிலான மாநிலங்களில் வென்றுள்ளனர். இதனால் நொடிக்கு நொடி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடும் போட்டி உள்ள மாநிலங்களின் முடிவைப் பொருத்து வெற்றி நிலவரம் அமையும்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஜோ பைடன் டெலாவரில் உரையாற்றினார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், முழு முடிவுகள் வரும் வரை கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன் கட்சியினர் சதி செய்ய முயற்சிப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், ‘இது முக்கியமான தருணம். மிகப்பெரிய வெற்றியை கொண்டாட அனைவரும் தயாராக இருங்கள். என் குடும்பத்தினருக்கும், அமெரிக்க மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்று இரவுக்குள் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகிவிடும். மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். டெக்சாஸ், புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் மட்டுமின்றி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். ஜார்ஜியா, மிச்சிகன், வடக்கு கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் ஆகிய மாகாணங்களிலும் வெற்றி பெறுவோம். ஆனால், வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சியினர் மோசடி செய்கின்றனர். சட்டத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி உச்சநீதிமன்றம் செல்வேன். வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட வேண்டும்’ என்று பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *