கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கூடுதல் கொரோனா சிகிச்சை பிரிவு.. அமைச்சர் S.P.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை, நவ-3

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 11கி.லி. திரவ கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர், புதுப்பிக்கப்பட்ட கொரோனாவிற்கு பிந்தைய சிறப்பு கவனிப்பு பிரிவு, புதுப்பிக்கப்பட்ட செவிலியர் விடுதி, அதிக வசதியுடன் 135 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் கொரோனா சிகிச்சை பிரிவு ஆகியவற்றை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது;-

“கொரோனா தொற்று பேரிடரின் போது தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்த சூழ்நிலையில் படுக்கை வசதிகளை மேம்படுத்தக் கருதி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் சிதிலமடைந்திருந்த நிர்வாக அலுவலகம் ரூ.35 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு 80 நோயாளிகள் பயனடையும் வகையில் ஆக்ஸிஜன் மற்றும் பிற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவக் கல்லூரியின் செவிலியர் விடுதி ரூ.2 கோடி மதிப்பில் புரணமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 450 படுக்கை வசதிகள் இருந்தநிலையில், இந்த கூடுதல் வசதிகள் மூலம் தற்போது 215 படுக்கை வசதிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு மொத்தம் 655 படுக்கை வசதிகளுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை பெற ஏதுவாக தயார் நிலையில் உள்ளது. கோவை இ.எஸ்.ஐ, மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை மையத்தில் தினமும் 500 மாதிரிகளை பரிசோதித்து வந்த நிலையில் ரூ.27 லட்சம் மதிப்புடைய தானியங்கி ஆர்.என்.ஏ பிரித்தெடுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டு இப்பொழுது சுமார் ஒரு நாளைக்கு 1500 மாதிரி பரிசோதனைகள் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 2 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர் கொள்ளளவு பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், அதிகளவில் நுரையீரல் தொற்றுடன் வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை கருத்தில் கொண்டு ரூ.52 லட்சம் மதிப்பில் 11 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர் தற்சமயம் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் நுரையீரல் தொற்றுடன் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வந்தாலும் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க இயலும்.

இஎஸ்ஐ மருத்துவமனையில் தற்போது வரை சுமார் 8100 கொரோனா தொற்று நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அதில் 7550 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நோயாளிகள் அனைவருக்கும் அரசின் உதவியுடன் நிறுவப்பட்ட சி.டி ஸ்கேன் மூலம் சுமார் 7442 பேருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *