மக்கள் நீதி மய்யம் 3வது அணிக்கான தகுதியை பெற்று விட்டது.. கமல்ஹாசன் பேச்சு..!
சென்னை, நவ-3

மக்கள் நீதி மய்யம் வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக தொடர்ந்து தயாராகி வருகிறது. கடந்த செப்டம்பரில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளராகவும் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் மண்டல வாரியான மாவட்டச் செயலாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை தி.நகரிலுள்ள ஜிஆர்டி ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில், மக்களுடன் தான் கூட்டணி என கமல்ஹாசன் தெரிவித்தார்.
இரண்டாவது நாளாக இன்று (நவம்பர் 3) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அதில் சில நிமிடங்களை மட்டும் மக்கள் நீதி மய்யம் வீடியோவாக தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.
அதில் கமல்ஹாசன், “மூன்றாவது அணிக்காக தகுதி மக்கள் நீதி மய்யத்திற்கு வருமா என்று கேட்கிறார்கள், அது வந்துவிட்டது. எல்லா கிராமங்களிலும் மக்கள் நீதி மய்யத்திற்கான தேவை இருக்கிறது என்பதை நாம் உணரவைக்க வேண்டும். 2013ஆம் ஆண்டு டெல்லியில் நடந்தது (அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வரானது) போல நிகழத் தமிழகம் தயாராகிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார். மேலும், “பிக்பாஸில் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார்கள். ஆமாம், பிக் பாஸில் நடித்து கோடிக்கணக்கில்தான் வாங்குகிறேன். அதை எங்கு கொண்டு செலவு செய்கிறேன். வேறு உதாரணங்களை சொன்னால் என்னுடைய சக நடிகர்களை கிண்டலடிப்பதாக ஆகிவிடும். அவர்கள் சவுகரியமாக, ஆரோக்கியமாக, நன்றாக இருக்கட்டும். அதுதான் என்னுடைய ஆசை. நான் சம்பாதித்ததை என்னை வாழ வைத்தவர்களிடம்தான் கொட்டுவேன்” என்றவர், “மக்களிடம் செல்லும்போது பணம் கொடுக்க மாட்டோம் என்பதை அடித்துச் சொல்லுங்கள். திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளதாக சொல்கிறார்கள். அதில் ஒரு சிறிய திருத்தம். தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை அது இருக்கும். அதனை அழிக்க முடியாது. ஆகவே, கழகங்களுடன்தான் கூட்டணி இல்லை” என்று கூறினார்.