தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடங்கியது..!

சென்னை, நவ-3

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் http://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் இன்று முதல் நவம்பர் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் மருத்தவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான தரவரிசைப் பட்டியல் நவம்பர் 16-ம் தேதி வெளியாகிறது. விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் மருத்துவக் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்போது 3,600 எம்.பி.பி.எஸ். இடங்கள், 100 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்கள் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீதம், பட்டியலினத்தவருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் ஒதுக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் 30 சதவீத இடத்தில், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பட்டியலின ஒதுக்கீட்டில் உள்ள, 18 சதவீத இடங்களில், மூன்று சதவீதம் அருந்ததியினருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடாக 7.5 சதவீத இடங்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கையை அரசு முன்னெடுத்தது. தற்போது அதற்கு மாநில ஆளுநா் அனுமதியளித்ததைத் தொடா்ந்து நிகழாண்டிலேயே அந்த புதிய நடைமுறை அமலுக்கு வரவிருக்கிறது. நிகழாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தோ்வில் தகுதி பெற்ற மாணவா்களுக்கு 300-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ஒதுக்கீடாகக் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *