அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!!

வாஷிங்டன், நவ-3

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. முதன்முதலாக வெர்மாண்ட் மாநிலத்தில் உள்ள நியூ ஹாம்ப்ஷையர் கிராமத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. உலகின் அதிகாரமிக்க பதவியான அமெரிக்காவின் அதிபராக அடுத்து யார் பதவி வகிக்கப் போகிறார் என்பதை அனைத்து நாடுகளுமே ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்க உள்ளது. இதில், ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப்பும் (74), ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடெனும் (77) போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடந்தாலும் முன்னெப்போதையும் விட அமெரிக்கர்கள் இம்முறை வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் தொடங்கிய முன்கூட்டிய வாக்குப்பதிவு செய்யும் வசதியை பயன்படுத்தி இதுவரை 9.2 கோடி மக்கள் தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர். அதிபர் டிரம்ப் புளோரிடாவில் சொந்த ஊரில் தனது வாக்கை செலுத்தி விட்டார். தபால் ஓட்டு மூலமாகவும் மக்கள் தங்களை வாக்கை செலுத்தி உள்ளனர். கிட்டத்தட்ட 15 கோடி அல்லது 16 கோடி வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நேரடி வாக்குப்பதிவில் சுமார் 5 அல்லது 6 கோடி பேர் வாக்களிக்க வாய்ப்புள்ளது.

அதிபர் டிரம்ப்பை பொறுத்த வரையில், 4 ஆண்டு கால ஆட்சியில் சாதனைகளை விட சோதனைகளே அதிகம் உள்ளன. குறிப்பாக அவரது தலைமையிலான அரசு கொரோனாவை கையாண்ட விதம் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வல்லரசான அமெரிக்காவில் பல நவீன மருத்துவ வசதிகள் இருந்த போதிலம், உலகிலேயே அதிக பாதிப்பையும், பலியையும் சந்தித்துள்ளது. இது பொருளாதாரத்திலும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமின்றி எப்போதும் அமெரிக்கர்களையே முன்வைத்து பேசும் டிரம்ப், கறுப்பினத்தவர்களுக்கு எதிரானவராகவே இருந்துள்ளார். குறிப்பாக, ஜார்ஜ் பிளாய்ட் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் கறுப்பினத்தவர்கள் மத்தியில் டிரம்ப் மீது ஒட்டுமொத்த எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இதனால் கறுப்பினத்தவர்களில் பெரும்பாலான ஓட்டுகள் பிடெனுக்கு விழுவதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படிப்பட்ட சூழலில், அதிரடி நடவடிக்கைகளுக்கு சொந்தக்காரரான டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46வது அதிபராக மகுடம் சூடப் போகிறாரா அல்லது பிடென் வெற்றி பெற்று வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைக்கப் போகிறாரா என்பது இன்றைய வாக்குப்பதிவில் தெரிந்து விடும். வாக்குப்பதிவு முடிவுகள் அமெரிக்க நேரப்படி 4ம் தேதி அதிகாலையில் தெரியவரும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *