தீபாவளிக்கு பட்டாசு விற்பனைக்கு அதிரடி தடை.. ராஜஸ்தான் அரசு அறிவிப்பு

ராஜஸ்தானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் அம்மாநில அரசு திடீர் தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜெய்ப்பூர், நவ-2

கொரோனா ஊரடங்கு தளர்வு நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் நவ. 16ம் தேதி வரை மூடப்படும். அதே நேரத்தில் நீச்சல் குளம், சினிமா ஹால், தியேட்டர், மல்டிபிளக்ஸ், என்டர்டெயின்மென்ட் பார்க் போன்றவை முந்தைய உத்தரவின்படி நவ. 30ம் தேதி வரை மூடப்படும். தொற்றுநோயின் இந்த சவாலான நேரத்தில், பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பது அரசுக்கு மிக முக்கியமான என்பதால், தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.

இது குறித்து முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் பொது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க பட்டாசுகள் விற்பனை தடை செய்யப்படுகிறது. பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக, கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் இதயம் மற்றும் சுவாச நோயாளிகளும் பிரச்னைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மக்கள் தீபாவளியன்று (நவ. 14) பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை விற்பனை செய்வதற்கான தற்காலிக உரிமத்தை தடை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமணங்கள் மற்றும் பிற விழாக்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *