ஊராட்சி சாலைகள் ரூ.895 கோடியில் விரிவாக்கம்
சென்னை.அக்டோபர்.22
தமிழகத்தில் 1268 கிலோமீட்டர் நீளமுள்ள, 484 ஊராட்சி சாலைகள் மேம்பாட்டு பணிக்கு தமிழக அரசு 895 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில்1456 கிலோமீட்டர் நீளமுள்ள ஊராட்சி சாலைகள், இதர மாவட்ட சாலைகளாக மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில், கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், 1362 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை 1024 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்த நபார்டு மற்றும் ஊரக சாலைகள் பிரிவு தலைமை பொறியாளர் முன்மொழிவு அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை பரிசீலித்து, 1268 கிலோமீட்டர் நீளமுள்ள 484 ஊராட்சி சாலைகளை, இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த 895 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.