புதிய காற்றழுத்த தாழ்வு : கனமழை தொடரும்

சென்னை.அக்டோபர்.22

 வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அரபிக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம்,புதுவையில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்,மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புதிதாக உருவாகியுள்ளது. இது அடுத்த வரும் நேரங்களில் சற்று வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அரபிக் கடல் பகுதியில் உருவான  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நீடிக்கிறது என்றும் கூறினார்.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் எ என்றும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் என்று பாலச்சந்திரன் கூறினார். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள், சேலம் நாமக்கல் கிருஷ்ணகிரி தர்மபுரி ராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய  வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீனவர்கள் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு இன்றும் நாளையும்( 22, 23) ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

 வடகிழக்குப் பருவமழை  தீவிரம் காரணமாக பாம்பன், மண்டபம்  ஆகிய இடங்களில் தலா 18 செ.மீ மழையும் , ராமேஸ்வரம், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் 17 செ.மீ மழையும் பெய்துள்ளது. காரைக்கால், புதுக்கோட்டை அறந்தாங்கி இங்கேல்லாம் 11 செ.மீ. மழை பெய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *