அமைச்சர் துரைக்கண்ணு மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருக்கம்

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனை, அதிர்ச்சியை தருவதுடன் அதிமுகவுக்கு பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, நவ-1

தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்து வந்த துரைக்கண்ணு. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று நள்ளிரவு 11.15 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72.

இந்நிலையில், இன்று காலை தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார், காமராஜ், செல்லூர் ராஜூ ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும் தருகிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவில் பயணித்து கட்சிக்காக பாடுபட்டவர். துரைக்கண்ணுவின் இழப்பு அதிமுகவுக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடுத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இதனிடையே நல்லடக்கம் செய்வதற்காக அமைச்சர் துரைக்கண்ணு உடல் சென்னையில் இருந்து தஞ்சை ராஜகிரிக்கு புறப்பட்டது. வன்னியடி கிராமத்தில் உள்ள துரைக்கண்ணுவின் வயலில் மக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. அஞ்சலிக்கு பிறகு அரசலாறு அருகே அமைச்சர் துரைக்கண்ணு உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *