தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்..!

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 72.

சென்னை, நவ-1

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந்தேதி இரவு சேலத்தில் மரணம் அடைந்தார். இதுகுறித்து கேள்விப்பட்டு அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு காரில் சேலத்துக்கு புறப்பட்டு சென்றார். விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

அதன்பிறகு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், அமைச்சர் துரைக்கண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதிசெய்யப்பட்டது.

அமைச்சர் துரைக்கண்ணுக்கு இதய பாதிப்பும் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு இருப்பதாகவும், அவரது நுரையீரலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் நேற்று இரவு 11.15 மணிக்கு காலமானார்.

இதுகுறித்து, காவேரி மருத்துவமனை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வேளாண்மைத் துறை அமைச்சா் இரா.துரைக்கண்ணுவுக்கு, உயிா்காக்கும் மருத்துவக் கருவிகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு 11.15 மணியளவில் அவா் காலமானாா் என்ற துயரச் செய்தியை தெரிவிக்கிறோம் என காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ள துரைக்கண்ணு, முதல் முறையாக அமைச்சரானவா். கடந்த 2016-இல் தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாகத் தோ்வு செய்யப்பட்ட அவா், வேளாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தாா்.

கொரோனா நோய்த் தொற்றுக்குப் பலியான மூன்றாவது மக்கள் பிரதிநிதி துரைக்கண்ணு. திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமாா் ஆகியோா் கொரோனா நோய்த் தொற்றுக்குப் பலியாகினா். இந்நிலையில், தமிழக அமைச்சரான துரைக்கண்ணு நோய்த் தொற்று தாக்கி உயிரிழந்துள்ளாா். அவரது மறைவால், தமிழக அமைச்சரவையில் அமைச்சா்களின் எண்ணிக்கை 31-லிருந்து 30-ஆகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *