தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு
சென்னை.அக்டோபர்.22
தீபாவளிக்கு மறுநாளும் உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி திருநாள் வரும் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட
உள்ளது. சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாள் என்பதால் தீபாவளிக்கு தனியாக விடுமுறை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால், திங்கள்கிழமை தேவைப்படும் பட்சத்தில் உள்ளூர் விடுமுறை விட மாவட்ட கல்வி அதிகாரிகளை பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தலைமைச் செயலகப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வரும் 27-ஆம் தேதியன்று தீபாவளியை தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாட வசதியாக, வரும் 28-ஆம் தேதி திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென தமிழக அரசின் தலைமைச்செயலரிடம் கோரிக்கை
மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, தீபாவளிக்கு அடுத்த நாளான வரும் 28-ஆம் தேதி திங்கள்கிழமையன்று தமிழகம் முழுவதும் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்து உள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் பொதுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் 28ந் தேதி தீபாவளியையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.