புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம்..தமிழக அரசு அரசாணை

தமிழகம்- புதுச்சேரி இடையே பேருந்துகள் இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை, அக்-31

கொரோனா பரவல் காரணமாக கடந்த 7 மாதமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்த போதிலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணிகள் ரயில் சேவைக்கும், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கி தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகம்- புதுச்சேரி இடையே பேருந்து சேவையை தொடங்க புதுச்சேரி அரசு வேண்டுகோள் விடுத்தததை தொடர்ந்து இரு மாநிலங்கள் இடையே அரசு, தனியார் பேருந்துகளை உடனடியாக இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், தமிழ்நாடு – புதுச்சேரி இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *