சாதி காரணமாக தேவர் நினைவிடத்தில் அவமானப்படுத்தப்பட்டாரா எல்.முருகன்?.. வெடித்த சர்ச்சை..!!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் மரியாதையின்றி அனுப்பப்பட்டாரா? அதற்கு அவர் சாதிதான் காரணமா.? என்கிற விவகாரம் தற்போது வெடிக்க ஆரம்பித்துள்ளது.

சென்னை, அக்-31

முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. தென் மாவட்டங்களில் இது ஒரு திருவிழா போல நடைபெறும். தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முதல்வர், துணை முதல்வரும், திமுக சார்பில் முக ஸ்டாலினும், அமமுக சார்பில் தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அது போலவே பாஜக சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பாஜக சார்பில் வந்த எச். ராஜா, நயினார் நாகேந்திரன் ஆகியோர் தேவர் நினைவிடத்திற்குள் முதலில் போய் விட்டனர்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மாநில தலைவர் எல்.முருகனும் அங்கு அழைத்து வரப்பட்டார். அஞ்சலி செலுத்திய தலைவர்களுக்கு நினைவிடத்தின் நிர்வாகிகள், துண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், தினகரனுக்கும் மாலை போட்டு மரியாதை செய்யப்பட்டது.

ஆனால், பாஜகவில் மொத்தம் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.. எல்.முருகன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் இந்த மூவரில் யாருக்கு நன்றி மரியாதை செய்வது என்று குழப்பம் வந்தது.. பிறகு எச்.ராஜா அங்கிருந்த பூசாரியிடம் ஏதோ சொல்லவும், கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாத பாஜகவின் எச்.ராஜாவிற்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. இதனை பார்த்த எல்.முருகன் உடனே அங்கிருந்து திரும்ப முயன்றுள்ளார். இதை கவனித்துவிட்ட நயினார் நாகேந்திரன் பூசாரியிடம் இன்னொரு துண்டை வாங்கி, முருகன் கழுத்தில் போட்டு அவரை சமாதானம் செய்தாராம். இதனால் அந்த இடம் பரபரப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது. முருகன் அவமதிக்கப்பட்டு விட்டதாக அவரது ஆதரவாளர்கள் வருத்தமடைந்துள்ளனர். ஜாதி பார்க்கப்பட்டதா, அதனால்தான் முருகன் அவமதிக்கப்பட்டாரா என்றும் அவர்கள் மனம் குமுறியுள்ளனர். இருப்பினும் நயினார் நாகேந்திரன் சமயோஜிதமாக செயல்பட்டதால் சலசலப்பு உடனடியாக அடங்கிப் போய் விட்டது.

பசும்பொன் தேவரை பொறுத்தவரை, தேசிய தலைவர்.. ஆன்மீகத்தில் எந்த அளவுக்கு தூய்மையாக இருந்தாரோ, அதுபோலவே அரசியலிலும் இருந்தவர்.. முக்கியமாக பட்டியலின மக்களுக்கு தேவர் செய்த நன்மைகள் ஏராளம்.. அப்படி இருக்கும்போது அவரது நினைவிடத்தில் இப்படி ஒரு சலசலப்பு வந்திருக்கக் கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *