பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.. பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பட்டேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

குஜராத், அக்-31

இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சர்தார் படேலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்திவருகின்றனர். பட்டேல் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றடைந்த பிரதமரை முதலமைச்சர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் வரவேற்றனர்.

இன்று நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்திற்கு சென்ற மோடி, அங்கு பட்டேல் சிலைக்கு (ஒற்றுமைக்கான சிலை) மரியாதை செலுத்தினார். ஒற்றுமைக்கான சிலை என்ற பெயருடன், 182 மீட்டர் உயரத்துடன் உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையையும் இந்த சிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து படேல் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர், பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம், வன்முறையால் யாரும் பயனைடைய முடியாது. புல்வாமா தாக்குதலின்போது பாதுகாப்புப்படையினர் செய்த தியாகத்தை பற்றி வருத்தப்படாமல் சிலர் அரசியல் செய்தனர். எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை நாட்டின் நலன்கருதி தவிர்க்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *