ஐ.என்.எக்ஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமின்

 

டெல்லி.அக்டோபர்.22

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட  முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரத்திற்கு  உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 21ல் கைது செய்தனர். அவ்ர தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே இதே வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை கைது செய்துள்ளது. இந்நிலையில், சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்  தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு  நீதிபதிகளால் செப்டம்பர் 30-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவரது சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி ஆர்.பானுமதி, நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, சிபிஐ தரப்பில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்குதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கப்பட்டால், அவர் சாட்சிகளைக் கலைத்து விடுவதற்கு பாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சிபிஐ தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில், இன்று ப.சிதம்பரத்துக்கு ரூ.1 லட்சம் பிணைத் தொகையுடன் கூடிய ஜாமின் வழங்கி, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், வெளிநாடு செல்லக்கூடாது என்று கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.எனினும் அமலாக்கத்துறை சார்பிலும் கைது செய்யப்பட்டுள்ளதால் சிதம்பரம் சிறையிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *