ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ‘எனது தோழி’ என்ற திட்டம் அறிமுகம்..!

ரெயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்திய ரெயில்வே ‘எனது தோழி’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லி, அக்-30

ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ‘எனது தோழி’ என்ற திட்டம் தென் கிழக்கு ரயில்வேயில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதற்கு பெண் பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததால், இந்த நடவடிக்கை அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையின் முன்முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மூலம், ரயில் பயணம் செய்யும் பெண் பயணிகள், குறிப்பாக தனியாக பயணம் செய்பவர்களிடம், ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவல்துறையினரை தொடர்பு கொண்டு பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைப்பர். பயணத்தின் போது ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், 182 என்ற போன் செய்து தகவல் தெரிவிக்கும்படியும் கூறுவர்.

ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் (ஆர்பிஎஃப்), பெண் பயணிகளின் இருக்கை எண், ரயில் பெட்டி எண் ஆகியவற்றை சேகரித்து, ரயில் நிற்கும் இடங்களில் பாதுகாப்பு பணியில் உள்ள ஆர்பிஎப் காவல்துறையினருக்கு தெரிவிப்பர். அவர்கள், சம்பந்தப்பட்ட பெண் பயணிகளை கண்காணிப்பர். தேவைப்பட்டால், பெண் பயணிகளை தொடர்பு கொண்டு பேசுவர். ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் / மாநில ரயில்வே காவலர்களும் தனியாக பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கான பாதுகாப்பை வழங்குவர்.

சேர வேண்டிய இடம் வந்ததும், பெண் பயணிகளிடம் பாதுகாப்பு பற்றி கருத்துகளை ஆர்பிஎப் குழுவினர் சேகரிப்பர். இந்த கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ‘‘எனது தோழி’’ நடவடிக்கையின் கீழ் உள்ள ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடமிருந்து வரும் அவசர அழைப்புகளை மூத்த அதிகாரிகளும் கண்காணிப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *