பப்ஜி விளையாட்டுக்கு இன்று முதல் நிரந்தர தடை..!

இந்தியாவில் இன்று முதல் பப்ஜி விளையாட்டிற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. பிளே ஸ்டோரில் பப்ஜி நீக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, அக்-30

சீனா ஜூன் மாதம் இந்திய எல்லையில் நடத்திய ஆக்கிரிமிப்பு மற்றும் வீரர்கள் மீதான தாக்குதல் காரணமாக, மத்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை ஜூன் மாதம் தடை செய்தது. அப்போது, பல குடும்பங்கள் பப்ஜியையும் தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பினர். எனினும் அரசு தடை செய்யவில்லை. அதற்குக் காரணம் அது முழுக்க சீன செயலி அல்ல. இந்த விளையாட்டை தென் கொரிய நிறுவனம் தான் உருவாக்கி நிர்வகித்து வந்தது. எனினும் அதன்பிறகு மத்திய அரசு மேலும் பல செயலிகளுக்கு தடை விதித்தது.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பப்ஜி மொபைல் கேம், கட் கட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம்ஸ் ,கேரம் ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பொது ஒழுங்கை கருத்தில் கொண்டும் இந்த தடை உத்தரவு பிறபிக்கப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தெரிவித்தது. பப்ஜி விளையாடுவதால் இளைஞர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும், இதுபோன்ற செயலிகள் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன என்பதும் தெரிய வந்தது. பப்ஜி விளையாட்டு ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் வலைதளங்கள் மூலமாகவும், வேறு வகையிலும் சிலர் பப்ஜி விளையாட்டை தரவிறக்கி விளையாடி வந்தனர். இந்நிலையில் பப்ஜி விளையாட்டை முழுவதுமாக தடை செய்யும் நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு பப்ஜி விளையாட்டு செயலி கிடைக்கும் மறைமுக சர்வர்களையும் முடக்கியுள்ளது. இதனால் தற்போது இந்தியாவில் பப்ஜி முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *