இடைத்தேர்தல்: விக்கிரவாண்டி-76.41%, நாங்குநேரி-62.32%

சென்னை, அக்டோபர்-21

தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இறுதி நிலவரப்படி, விக்கிரவாண்டியில் 76.41% வாக்குகளும், நாங்குநேரியில் 62.32% வாக்குகளும், புதுச்சேரி காமராஜ் நகரில் 66.95% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் உட்பட 23 பேர் போட்டியிட்டனர்.

விக்கிரவாண்டியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சி சார்பில் கௌதமன் உட்பட 12 பேர் களம் கண்டனர். புதுச்சேரி காமராஜா்நகா் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில், ஜான்குமாரும், என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளராக புவனேஸ்வரன் போட்டியிட்டனர். கடும் போட்டிகளுக்கு இடையே மூன்று தொகுதிகளுக்கும் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது.

மழை காரணமாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் குளறுபடிகள் காரணமாகவும் காலை 10 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது. பெரும்பாலான இடங்களில் கொட்டும் மழையிலும் மக்கள் குடைபிடித்துக்கொண்டு தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்குகளை செலுத்தினர். 3 தொகுதிகளிலுமே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பும், வரிசையில் நின்ற ஒருசிலருக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பிறகு, வாக்குப்பதிவு மற்றும் விவிபாட் இயந்திரங்களை சரிபார்த்து வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணியானது நடைபெற்றது. இறுதி நிலவரப்படி, விக்கிரவாண்டியில் 76.41% வாக்குகளும், நாங்குநேரியில் 62.32% வாக்குகளும், புதுச்சேரி காமராஜ் நகரில் 66.95% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *