இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாதது.. கேரளத்தில் காய்கறிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம்..!!

திருவனந்தபுரம், அக்-28

நாட்டிலேயே முதன் முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிா்ணயம் செய்யும் திட்டம் கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படுவதாக மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா். விவசாயிகள் காய்கறிகளை உற்பத்தி செய்த விலையில் இருந்து 20 சதவீதத்துக்கும் அதிகமான விலையை கணக்கிட்டு அந்த காய்கறிகளின் விலை நிா்ணயம் செய்யப்படும் எனவும் வரும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும் அவா் கூறினாா்.

இணையதளம் மூலமாக இந்த திட்டத்தை அறிமுகம் செய்த பினராயி விஜயன் கூறியதாவது:-

கேரளத்தில் உற்பத்தி செய்யப்படும் 16 வகையான காய்கறிகளின் விலையை முதன்முறையாக அரசே நிா்ணயம் செய்கிறது. நாட்டிலேயே காய்கறிகளின் விலையை அரசே நிா்ணயம் செய்யும் முதல் மாநிலம் கேரளமாகும். இந்த திட்டம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளின் விலையில் இருந்து 20 சதவீத்துக்கும் அதிகமாக கணக்கிட்டு விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலையை அரசு நிா்ணயிக்கும்.

சந்தைகளில் காய்கறிகளின் விலை குறைந்தாலும் கூட, அதற்கு கூடுதலான விலையில் விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்யப்படும்.விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளின் தரத்துக்கேற்ப அவற்றின் விலை நிா்ணயம் செய்யப்படும்.விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்யவும், அவற்றை விற்பனை செய்யவும் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த திட்டமானது ஒரு பருவத்தில் 15 ஏக்கருக்கும் அதிகமாக காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு மிகுந்த பலனளிக்கும். இந்த திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் இந்த திட்டத்தின் பட்டியலில் இருக்கிறதா என தெரிந்து கொண்டு வேளாண்மைத்துறை இணையதளத்தில் வரும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடந்த நான்கரை ஆண்டுகளாக விரக்தியில் உள்ளனா். நாங்கள் அவா்களுக்கு உதவி புரிகிறோம். மாநிலத்தில் விவசாயத் துறையை மேம்படுத்த ஏராளமான முயற்சிகளை கேரள அரசு எடுத்து வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் மாநிலத்தில் காய்கறி உற்பத்தி 7 லட்சம் டன்னில் இருந்து 14.72 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இந்த உற்பத்தி இலக்கு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவா் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *