கொரோனா தடுப்பு பணிகளில் கவனக்குறைவு வேண்டாம்..அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா தொற்றுகுறைந்திருந்தாலும், பாதுகாப்பு பணிகளில் கவனக்குறைவு வேண்டாம். மக்கள் அதிகம் கூடும் திருமண நிகழ்ச்சிகள், வணிக வளாகங்களை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, அக்-28

தமிழக நகர்ப்புற மற்றும்ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும்வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நீர்நிலைகளை புனரமைத்து, மழைநீர்வடிகால்வாய்களை தூர்வாரி,மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்து மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மத்திய ஜல் சக்தி துறையின் ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.1,463 கோடியே 66 லட்சம் மதிப்பில் 7 குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்குஉட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிடம் இருந்து கடந்த ஏப்ரல் 1 முதல் அக்.24-ம் தேதி வரை ரூ. 2.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு குறைந்திருந்தாலும், தடுப்பு, பாதுகாப்பு பணிகளில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. பொது மக்கள் அதிகம் கூடும் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் வணிக நிறுவனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக இயக்குநர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *