சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை…
பெங்களூரூ, அக்டோபர்-21
சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது, ஆகையால் அவர் முன்கூட்டியே வெளியே வர வாய்ப்பில்லை என சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தண்டனை காலம் முடிந்து விரைவில் சிறையில் இருந்து விடுதலை ஆகி, வெளியே வர உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. 2020 ம் ஆண்டு இறுதியிலேயே சசிகலாவின் தண்டனை காலம் முடிகிறது. ஆனால் நன்னடத்தை விதிகளின் படி முன்னதாகவே அவர் விடுதலை செய்யப்படலாம் என கூறப்பட்டது.
இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டிஜிபி மெக்ரித்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு விடுதலைக்கான நன்னடத்தை விதிகள் பொருந்தாது. அதனால் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வாய்ப்பே இல்லை. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்றார்.