தைரியம் இருந்தால் ஆட்சியை கவிழுங்கள்.. பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே நேரடி சவால்..!
முடிந்தால் எங்கள் ஆட்சியை கவிழ்த்து பாருங்கள் என்று பாரதிய ஜனதாவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.
மும்பை, அக்-26

மகாராஷ்டிராவில் மும்பை நகரில் தசராவை முன்னிட்டு சிவசேனா கட்சியின் வருடாந்திர பேரணி நடந்தது. இதில் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி 11 மாதங்களுக்கு முன் ஆட்சியை பிடித்தது. முடிந்தால் எங்கள் ஆட்சியை கவிழ்த்து பார்க்கட்டும் என்று பாரதிய ஜனதாவுக்கு சவால் விடுக்கிறேன். எதிர்க்கட்சி ஆட்சிகள் பற்றி அக்கறை செலுத்தாமல் பா. ஜனதா நாட்டு விவகாரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எங்கள் இந்துத்துவ கொள்கை பற்றி பலர் சந்தேகம் எழுப்பினர். ஆனால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தங்கள் வால்களை மறைத்துக்கொண்டனர். ஜிஎஸ்.டி தோல்வியடைந்துவிட்டதால் அதை கைவிட்டு பழைய வரி திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
நீங்கள் பீகாரில் இலவசமாக கொரோனா தடுப்பூசி கொடுப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி என்றால் நாட்டின் மற்ற பகுதிகள் பாகிஸ்தானா? அல்லது வங்காளதேசமா?. இதுபோன்று பேசியதற்கு அவர்களாகவே அவமானப்பட வேண்டும். நீங்கள் மத்திய அரசாக இருக்கிறீர்கள்.நான் முதலமைச்சராக பதவி ஏற்றக் காலத்தில் இருந்து, ஆட்சி கவிழ்ந்து விடும் என்கிறார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால், அதை செய்து காண்பியுங்கள் என்பதை சவாலாக சொல்கிறேன்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.