7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!

மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.

டெல்லி, அக்-22

மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக உடனடியாக அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்குத்தொடரப்பட்டுள்ளது.

ஜெய்சுகின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி கொண்டிருக்கின்றன. அதில் சுமார் 3,800 பள்ளிகள் தமிழக அரசால் நடத்தப்படக்கூடிய பள்ளிகள். இதில் 45% மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், இவர்களின் மருத்துவ படிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டும் அவர்களுடைய கனவுகளை நினைவாக்கும் வகையில் தற்போது 7.5% உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என ஒரு சட்டமசோதாவானது நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் இதுவரை அதில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே உடனடியாக இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால் இந்த ஆண்டே 300 மாணவர்கள் பயனடைவார்கள். என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *