விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை, அக்-22

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த முதலமைச்சர் பழனிசாமி, தற்போது மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இன்று அவர், விராலிமலையில் சீறிச்செல்லும் ஜல்லிக்கட்டு காளையை ஒரு வீரர் அடக்குவது போன்ற வெண்கல சிலையை திறந்து வைத்தார். கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டை பெருமிதப்படுத்தும் விதமாக இந்த சிலை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது :- தமிழகத்திலேயே ஜல்லிக்கட்டு அதிகமாக நடக்கும் மாவட்டம் புதுக்கோட்டை. இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 110 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பான காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்,” எனக் கூறினார்.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ரூ.100 கோடி மதிப்பில் விரிவாக்கப்பட்ட ஐ.டி.சி தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இந்திய அளவில் தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக உள்ளது என்றும், 55 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *