பீகார் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி…பாஜக வாக்குறுதி..!

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்னா, அக்-22

பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.பிகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் உள்ளார். அவரது கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைந்துள்ளது. அதே போல, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் ஆர்ஜேடி ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தமது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், முதியோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட ஏராளமான இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டது. பீகார் பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.

பீகாரின் நகர் மற்றும் கிராமங்களில் 2022ம் ஆண்டுக்குள் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

பீகாரில் மருத்துவம் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘பீகாரில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உயர்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 3 சதவீதத்தில் இருந்து 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் முந்தைய ஆட்சியில் வளர்ச்சி அடையவில்லை. எங்கள் அரசு மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கு முன்னுரிமை அளித்ததால் இந்த வளர்ச்சி சாத்தியமானது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *