கொரோனா வைரஸ் முழுமையாக அழியவில்லை.. 7வது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை..!!

கொரோனா ஒழிந்து விட்டது என பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி, அக்-20

இன்று 7-வது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொது முடக்கம் முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஊரடங்கு காலம் முடிந்து பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. உலகளவில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் இறப்பு விகிதம் மிகக்குறைவு. சிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை. கொரோனா விஷயத்தில் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. அதை நாம் கெடுத்து விடக்கூடாது.

நாடு முழுவதும் பரிசோதனைக்கு 2000 ஆய்வுகளும், சிகிச்சைக்கு பல லட்சம் மையங்களும் உள்ளன.கொரோனா போய்விட்டது என பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் கொரோனா குறைந்து விட்டது என்று நினைக்கையில் இன்னும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக போகவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். அமெரிக்கா, பிரேசில் நாட்டில் பாதிப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் மேற்கொண்ட அதிகமான பரிசோதனை இந்த போரில் முக்கியமாக ஆயுதமாக இருந்தது. அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். அலட்சியமாக இருப்பவர்கள் அவர்கள் பாதிப்பதோடு மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். பாதிப்பு குறைவதை கண்டு பலர் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மனிதனைக் காப்பாற்ற உலக அளவில் போர் போன்ற கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நோய், நெருப்பு போன்றவற்றை நாம் எளிதாக கருதக்கூடாது. பண்டிகை காலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தசரா, தீபாவளி, ஈத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருகிறது. மக்கள் பாதுகாப்புடன் கொண்டாட வாழ்த்துக்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *