மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு.. ஆளுநரை சந்தித்து அமைச்சர்கள் வலியுறுத்தல்

மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர கவர்னர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை, அக்-20

மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது

இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து அமைச்சர்கள் இன்று வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்‌, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார்‌, சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்‌, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்‌ ஆகியோர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

கவர்னருடனான சந்திப்பிற்கு பின் அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

இட ஒதுக்கீடு வழங்கினால் தான், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவராக முடியும். 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு முதலமைச்சர் அறிவுரைப்படி கவர்னரை சந்தித்தோம்.
தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கவர்னரிடம் விளக்கி கூறினோம். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக கவர்னர் உறுதியளித்துள்ளார். நல்ல முடிவை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். ஆளுநரின் பரிசீலனையில் உள்ள மசோதாவுக்கு கட்டாயப்படுத்த முடியாது. சமூக நீதியை பாதுகாக்க விரைந்து முடிவு எடுக்குமாறு ஆளுநரிடம் கூறியுள்ளோம். முடிவு எடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் விதிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *