நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி வெளியிட்ட 10 பேரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.. ஆதார் ஆணையம் பதில்..!
நீட் தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிட்ட புகைப்படங்களின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் பதில் அளித்துள்ளது.
சென்னை, அக்-18

நீட் தேர்வில் மோசடி செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக 2 வழக்குகள் சிபிசிஐடி விசாரணையில் உள்ளன. மோசடி செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் என சுமார் 15 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து மோசடி செய்து தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 10 பேரின் புகைப்படங்களை கடந்த பிப்ரவரி மாதம் சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர். புகைப்படத்தை வைத்து அவர்களின் விவரங்களை கொடுக்குமாறு ஆதார் ஆணையத்திற்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஆதார் ஆணையம் சிபிசிஐடி போலீசுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளது. அதில், இந்த மாணவர்கள் தொடர்பான தகவல்கள் எங்களிடம் இல்லை என்றும் இது தொடர்பான விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆதார் ஆணையத்தின் பதில், தற்போது இந்த வழக்கில் இது பின்னடைவாகதான் பார்க்கப்படுகிறது. வழக்கின் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ரஷித் இதுவரை கைது செய்யப்படவில்லை. ரஷித் குறித்து காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது, குறிப்பிடத்தக்கது.