கொரோனாவுக்கான தடுப்பு மருந்து விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுங்கள்..பிரதமர் மோடி உத்தரவு..!
கொரோனாவுக்கான தடுப்புமருந்து தயாரானவுடன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் தடுப்பு மருந்து விநியோகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகள் மற்றும் நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
டெல்லி, அக்-17

பிரதமர் மோடி தலைமையில் நாட்டில் கொரோனா பாதிப்பு சூழ்நிலை, தடுப்பு மருந்து வினியோகம் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு தயாராகுதல் உள்ளிட்டவை பற்றிய ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ச வர்தன், பிரதமருக்கான முதன்மை செயலாளர், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) மற்றும் பிற துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நமக்கு அருகே இருப்பவர்களுக்கு மட்டும் தடுப்பு மருந்து கிடைக்க செய்யும் வகையில் நம்முடைய முயற்சிகளை நாம் நிறுத்தி விட கூடாது. தடுப்பு மருந்துகள், சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் மருந்து வினியோக நடைமுறை ஆகியவற்றுக்கான ஐ.டி. தளம் ஆகியவற்றை உலக நாடுகளு முழுவதும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று உலக சமூகத்திற்கு உதவும் முயற்சியாக பிரதமர் உத்தரவிட்டு உள்ளார். கொரோனா தடுப்பு மருந்து விரைவாக கிடைக்கும் வகையில் அதனை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். தளவாடங்கள், வினியோகம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தி உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.