நீட் தேர்வு முடிவுகள் தொடர்பான புள்ளிவிவர அறிவிப்பில் குளறுபடி.. புதிய முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.!

நீட் தேர்வு முடிவுகள் தொடர்பான புள்ளிவிவர அறிவிப்பில் குளறுபடி கண்டறியப்பட்டதையடுத்து, திருத்தம் செய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டது.

டெல்லி, அக்-17

நடப்பு கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில், 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். கொரோனாவால் நீட் தேர்வை எழுதாமல் விட்ட சுமார் 290 பேருக்கு அக்டோபர் 14ல் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. இத்தேர்வில் நாடு முழுவதும் 7 லட்சத்து 71 ஆயிரத்து 500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, உத்தரகாண்ட, திரிபுரா மாநில நீட் தேர்வு முடிவு விவரங்களில் குளறுபடி இருந்ததால் சர்ச்சையானது. தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், குழப்பம் ஏற்பட்டது. குளறுபடி ஏற்பட்டதன் காரணமாக நேற்று மாலை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து நீக்கியது. இந்நிலையில், மீண்டும் திருத்தப்பட்ட புதிய நீட் தேர்வு முடிவுகளை nta.ac.in என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 3,536 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், திருத்தம் செய்யப்பட்டு 1,736 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைபோல், உத்தரகாண்ட மாநிலத்தில் 12,047 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், 37,301 பேர் தேர்ச்சிப் பெற்றதாக முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், திருத்தம் செய்யப்பட்டு 7,323 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியலில் தமிழகத்திற்கு 5ம் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 99,610 பேர் தேர்வு எழுதிய நிலையில், 57.4 சதவீதம் பேர், அதாவது 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *