தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை, அக்-17

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. நேற்றும், இன்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஆலந்தூர், சைதாப்பேட்ைட, மயிலாப்பூர், சென்ட்ரல், தண்டையார்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, பூக்கடை, காசிமேடு, பெரம்பூர், திருவிக நகர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகளான தாம்பரம், அம்பத்தூர், ஆவடி, பல்லாவரம், பம்மல், புழல், செங்குன்றம், திருவொற்றியூர் மணலி மாதவரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தவிர, திருத்தணி, மாமல்லபுரம், இசிஆர், ஓஎம்ஆர், கூடுவாஞ்சேரி, திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் இடியுடன் லேசான மழை பெய்தது.
இந்நிலையில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை சேத்துப்பட்டில் 10 செ.மீ., சென்னை பெரம்பூரில் 5 செ.மீ., மழை பதிவானது என வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.