பருவமழை தீவிரம்…மீனவர்களுக்கு எச்சரிக்கை…
சென்னை.அக்டோபர்.21
தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ள வானிலை மையம் குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று மாலையில் இருந்து இடை விடாமல் கனமழை பெய்து வருகிறது.திருப்பூர், சேலம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது. சிவகங்கை மாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் இன்று கோவையில் பள்ளி கல்லூரிகளுக்கும்,சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது, கடலூர்,சிதம்பரம்,விருத்தாசலம்,புவனகிரி,சேத்தியாத்தோப்பு என அனைத்து பகுதிகளிலும் மழை பெய்துவருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர், வேதாரண்யம், முத்துப்பேட்டை, திருச்சி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மூன்றாவது நாளாக தொடர்ந்து மழை பெய்கிறது.இதனிடையே மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளார். அணைகள், ஆறுகள், குளங்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில்,சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் , வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாகவும்,அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தமிழகத்தில் கன மழை பெய்துவருவதாக கூறினார்.
கடந்த கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது, அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை 14 செ.மீ,பெரியநாயக்கன்பாளையம் 12 செ.மீ, புவனகிரியில் 9 செ.மீ மழை அளவும் பதிவாகி உள்ளதாக கூறினார்.
குமரி, நெல்லை, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரி கோவை, ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். டெல்டா மாவட்டங்கள் கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை வேலூர் சேலம் மதுரை தேனி திண்டுக்கல் ஈரோடு திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என பாலச்சந்திரன் தெரிவித்தார்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் குறிப்பிட்ட அவர், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் குமரி கடல் பகுதிகளில் 21 22 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரித்தார்.