திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் மகன் மறைவு – ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்..!

சென்னை சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் கொரோனா தொற்றால் திடீரென உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை, அக்-17

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனும் கடந்த செப்டம்பர் 28ம் தேதி கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தார். அதன் பிறகு, மா.சுப்பிரமணியனின் இளைய மகனான அன்பழகன் (34) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த வாரம் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்பழகனின் மறைவு தி.மு.கவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் மகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மா.சுப்பிரமணியத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஆறுதல் கூறினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மா.சுப்ரமணியன் அவர்களின் மகன் திரு.அன்பழகன் அவர்கள் இன்று மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனது அன்புமகனின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும்
மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்! என தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம் அவர்களது இளைய மகன் அன்பழகன், கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார் எனும் செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். மா.சுப்பிரமணியம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அருமைச் சகோதரர் மா.சுப்பிரமணியன் மகன் அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தது நெஞ்சை உறைய வைத்துவிட்டது. மா.சு இணையர் கண்ணின் மணி போல் காத்துவந்தார்கள். ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால் ஓடி நிற்கும் மா.சு.வுக்கு இப்படியொரு சோதனையா?
ஆழ்ந்த இரங்கல்கள்! என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *