அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை.. அமைச்சர் அன்பழகன் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி, அக்-16

தருமபுரியில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும். உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு, கூடுதல் கட்டணம் வர வாய்ப்பு நேரிடும். நுழைவுத்தேர்வு, கூடுதல் கட்டணம் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படுவர். உயர் சிறப்பு அந்தஸ்து மூலம் வெளிமாநில மாணவர்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்தாலும் அண்ணா பெயர் நீக்கப்படாது. இந்த நிலையெல்லாம் வரக்கூடாது என்பதற்காகத்தான் உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு நினைக்கிறது. சிறப்பு அந்தஸ்துக்காக எதையும் பறிகொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. நாம் ஏற்கனவே நல்ல நிலையில்தான் இருக்கிறோம்; அதனால் உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை.

சிறப்பு அந்தஸ்தால் என்ன கிடைக்குமோ அதை மாநில அரசாலேயே செய்ய முடியும். இடஒதுக்கீடு பாதிக்கப்படவும், கட்டண உயர்வுக்கும் தமிழக அரசு துணை போகாது. துணை வேந்தர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலகத் தரத்துடன்தான் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அரசுக்கு கட்டுப்பட்டது தான் பல்கலைக்கழகமே தவிர, பல்கலைக்கு கட்டுப்பட்டது அல்ல அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *