மன்னார்குடி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் மோசடி..லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

மன்னார்குடி அருகே நெல் கொள்முதலில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கிடங்கிற்கு கொண்டு சென்ற நெல் மூட்டைகளை மீண்டும் கொண்டு வந்து கொள்முதல் செய்தது போல் கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளதை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்கண்டுபிடித்துள்ளனர்.

திருவாரூர், அக்-16

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள கண்ணாரப்பேட்டையில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. தற்போது, இந்த பகுதியில் குறுவை நெல் சாகுபடி முடிந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை, விவசாயிகள் அரசு நோடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

கண்ணாரப்பேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில், தமிழக அரசு அறிவித்தப்படி தினசரி ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவு விடப்பட்டிருந்தும். இதனை பின்பற்றாமல் நாள் ஒன்றுக்கு 700 நெல் மூட்டை மட்டும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்படும் நெல்லை கொள்முதல் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலக நேரம் என குறிப்பிடப்பட்டு இருக்கும் போது, இதனை மீறி இரவு நேரங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

மூட்டைக் கு கூடுதலாக ரூபாய் 40 வரை கட்டாய வசூல் செய்யப்பட்டு வருவதாக, அப்பகுதி விவசாயிகளிடமிருந்து அதிக அளவில் புகார் வந்ததையடுத்து. திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் வேணுகோபால், ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் காவலர்கள், வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு, கண்ணாரப்பேட்டை அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்திற்கு திடீர் சோதனைக்கு வந்தனர்.
அப்போது, அங்கு பணியிலிருந்த பட்டியல் எழுத்தர் ஆனந்தராஜ் (32) மற்றும் சுமைப் பணியாளர்கள், இரவு காவலர் ஆகியோரிடம் விசாரணை செய்தனர்.

அலுவலக நேரம் முடிந்து ஒரு லாரியில் இருந்து நெல் மூட்டைகள் அப்போது இறக்கிக் கொண்டு இருந்துள்ளனர். அவர்களிடம் அதிகாலை 4 மணி வரை விடிய விடிய விசாரணை செய்தனர். அதன் முடிவில், பட்டியல் எழுத்தர் ஆனந்தராஜிடம் இருந்து கணக்கில் வராத ரூ.87,890-ஐ பறிமுதல் செய்தனர். மேலும், பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்ததை விட கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டிருந்த கணக்கில் வராத 185 நெல் மூட்டைகள் இருப்பதையும் கண்டறிந்தனர்.

இதனை அடுத்து, மறு உத்தரவு வரும் வரை இரவு நேரத்தில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை கொள்முதல் நிலையத்திலிருந்து எடுத்து செல்லக் கூடாது என தெரிவித்துவிட்டு ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

நேற்று அதிகாரிகள் சம்பளத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதனை கண்டுபிடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *