அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்..!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
சென்னை, அக்-15

அ.ம.மு.க. பொருளாளரான வெற்றிவேல் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். கடந்த 6-ந்தேதி வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில், கொரோனா மற்றும் வேறுசில உடல்நல பிரச்சனைகள் காரணமாக வெற்றிவேலின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமடைந்திருந்தது. மேலும், திடீர் மூச்சுத்திணறலும் ஏற்பட்டதையடுத்து, செயற்கை சுவாசக்கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். போரூர் மருத்துவமனையில் வெற்றிவேல் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிவேல் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தவர் வெற்றிவேல். சசிகலா, டிடிவி தினகரனுக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் வெற்றிவேல். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எல்எல்ஏக்கள் 18 பேரில் வெற்றிவேலும் ஒருவர். எடப்பாடி அரசை எதிர்த்ததால் தகுதிநீக்கம் செய்யயப்பட்டார் வெற்றிவேல். தகுதி நீக்கத்தை அடுத்து தனது பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை இழந்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.