சிறியவகை செயற்கைக்கோள் கண்டுபிடித்த கரூர் மாணவர்களுக்கு திமுக சார்பில் ரூ. 3 லட்சம் நிதியுதவி
சிறிய செயற்கைக்கோள் கண்டுபிடித்த மாணவர்களுக்கு திமுக சார்பில் ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் கண்டுபிடித்த கரூர் அரசு கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை, அக்-15

கியூப் இன் பேஸ் என்ற நிறுவனம் நாசாவுடன் இணைந்து ஆண்டுதோறும் 11 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு போட்டி நடத்தி வருகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நாகம்பள்ளியை சேர்ந்தவர் கேசவன்(18). தாந்தோணிமலையை சேர்ந்தவர் அட்னன்(18). கரூர் தென்னிலையை சேர்ந்தவர் அருண்(19). கேசவன் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியிலும், அட்னன், அருண் ஆகிய இருவரும் கரூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியிலும் பயின்று வருகின்றனர்.
மூவரும் இணைந்து, ஒரு செயற்கைகோள் கண்டுபிடித்து போட்டித்தேர்வில் கலந்து கொண்டனர். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன், 3 செமீ, 64 கிராம் எடையுள்ள செயற்கைகோளை கண்டுபிடித்து ஒப்புதலுக்காக நாசாவுக்கு அனுப்பி வைத்தனர். இவர்களின் கண்டுபிடிப்பு ஏற்கப்பட்டதோடு, மூவருக்கும் சான்றிதழ்களும் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களின் இந்த கையடக்க சாட்டிலைட் அடுத்தாண்டு ஜூன் 20ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் நாசாவின் விண்வெளி தளத்தில் இருந்து 120 கிமீ தூர உயரத்தில் ஏவப்பட உள்ளது.
இந்த நிலையில்,செயற்கைக்கோள் கண்டுபிடித்த கரூர் அரசு கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழக மாணவர்களான அத்னான், கேசவன், அருண் ஆகியோர் தயாரித்த சிறியவகை செயற்கைக்கோள், நாசா விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கரூர் மாவட்டக் கழகம் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நிதியை இன்று வழங்கினேன். அனைத்துத் துறைகளிலும் நம் தமிழக மாணவர்கள் தலைநிமிர வேண்டும். வாழ்த்துகள்!’ எனத் தெரிவித்துள்ளார்.