தலைமைச்செயலகத்தில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. 3 நாட்களில் 56 பேருக்கு தொற்று உறுதி..!!

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 நாட்களில் தலைமைச் செயலக ஊழியர்கள் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, அக்-15

தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கடந்த மே மாதம் முதல் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது. முதலில் 33 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் பின்னர் 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் தொடக்கத்தில் இருந்து பழையபடி 100 சதவிகித ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. சென்னையில் தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை 37 துறைகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் கடந்த மூன்று நாட்களில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே ஊழியர்கள் தலைமைச் செயலகத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்பவது விதி. அதேபோல் முகக்கவசம், சமூகஇடைவெளி போன்றவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிகளும் அமலில் உள்ளது. ஆனால் இந்த விதிகளை ஊழியர்களும், தலைமைச் செயலகத்துக்கு வரும் பொதுமக்களும் முழுமையாக கடைப்பிடிக்காததே மீண்டும் கொரோனா தொற்று பரவலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கொரோனா முதல் பரவல் எழுந்த போது தலைமைச் செயலகத்தில் 200 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *