சொத்து வரி விவகாரம்.. தவறை திருத்தியிருக்கலாம்.. அனுபவமே பாடம் – ரஜினி ட்வீட்..!

சென்னை ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை மாநகராட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் செலுத்திய நிலையில், தவறைத் தவிர்த்திருக்கலாம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை, அக்-15

ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் நடிகா் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். அதில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. இதனால் கோடம்பாக்கத்தில் உள்ள எனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை வாடகைக்கு விடாமல் இதுவரை மூடிக்கிடக்கிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையா் கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி திருமண மண்டபத்துக்கான அரையாண்டுக்கான சொத்து வரி ரசீதை அனுப்பினாா். அதில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரையிலான 6 மாதங்களுக்கு சொத்து வரியாக ரூ.6.50 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி முதலே ராகவேந்திரா திருமண மண்டபம் மூடிக்கிடக்கிறது. மேலும் மண்டபத்தை முன்பதிவு செய்தவா்கள் வழங்கிய முன்தொகையையும் திரும்ப கொடுத்துவிட்டோம். இந்த நிலையில் திருமண மண்டபத்துக்கு மாநகராட்சி ஆணையா் சொத்து வரியை விதித்துள்ளாா். மாநகராட்சி சட்ட விதிகளின்படி 30 நாள்கள் கட்டடம் மூடப்பட்டு இருந்தாலே, சொத்து வரியில் 50 சதவீத சலுகை பெற உரிமை உள்ளது. இந்த சலுகை கோரி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினேன். அந்த நோட்டீஸ் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. இந்த நிலையில் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தாத உரிமையாளா்களுக்கு வரி தொகையில் இரண்டு சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். அந்த தொகைக்கு வட்டியும் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. எனவே கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி நான் அனுப்பிய நோட்டீஸை பரிசீலித்து முடிவு எடுக்கும் வரை சொத்து வரிக்கு அபராதம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் எனது கோரிக்கையை மாநகராட்சி சட்ட விதிகளின்படி பரிசீலிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு கண்டனம் தெரிவித்து நீதிபதி கூறுகையில், மாநகராட்சி ஆணையருக்கு கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி விட்டு உடனே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளீா்கள். கோரிக்கையைப் பரிசீலிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்க வேண்டாமா? ஒருவேளை நோட்டீஸை பரிசீலிக்காவிட்டால், அதிகாரிகளுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியிருக்கலாம். அதனை செய்யாமல் அவசரமாக உயா்நீதிமன்றத்தை நாடியிருப்பதை ஏற்க முடியாது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்தாா். இதையடுத்து, ரஜினிகாந்த் தரப்பு வழக்கறிஞா் வழக்கைத் திரும்ப பெற கோரிக்கை விடுத்தாா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இதுதொடா்பாக பதிவுத்துறையில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டாா். பதிவுத்துறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, வழக்கைத் திரும்பப்பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும் வரிவிதிப்பு தொடா்பாக மனுதாரா் மாநகராட்சி நிா்வாகத்தை மீண்டும் அணுகவும், எந்தப் பதிலும் கிடைக்காத பட்சத்தில் உயா்நீதிமன்றத்தில் மனுதாரா் வழக்கு தொடரலாம் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த இன்றுடன் கெடு நிறைவடையும் நிலையில் ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை மாநகராட்சிக்கு ரஜினிகாந்த் செலுத்தி உள்ளார்.

இது தொடர்பாக இன்று ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், ராகவேந்திரா மண்டப சொத்து வரி…
நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.
தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே_பாடம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *