பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை, அக்-14

தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் த.ந.ஹரிஹரன், நகராட்சி நிர்வாக ஆணையாளர் கா.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 11-ந்தேதி வரை 58,493 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 30 லட்சம் நபர்கள் பயனடைந்து உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடையே கண்டறிய 12,460 ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் 5-ல் ஒரு பங்கு (21 சதவீதம்) பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்போது 13,751 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 11-ந்தேதி வரை 15,74,334 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் பெருநகர சென்னை மாநகராட்சி களப்பணி மூலம் சேகரிக்கப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட மாதிரிகள் 7,93,766 ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் கடந்த 10-ந்தேதி வரை ரூ.257 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் சென்னை நீங்கலாக 10 மாநகராட்சிகளில் ரூ.9,688.62 கோடி மதிப்பில் 450 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு இதில் 96 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ரூ.7,200.84 கோடி மதிப்பிலான 269 பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 85 பணிகளை துவங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ரூ.2,57,299 கோடி மதிப்பில் 4,807.78 கி.மீ. நீளமுள்ள 4,189 சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.23,117 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டு, அதில் இதுவரை 2,050 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் குடிநீரை தொடர்ந்து வழங்க வேண்டும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பேரூராட்சிகள் இயக்குனர் எஸ்.பழனிச்சாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜெயு.சந்திரகலா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் எல்.நிர்மல் ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *