ஹரியானா: சைக்கிளில் வந்து வாக்களித்தார் முதல்வர் மனோகர் லால் கட்டார்!!!
சண்டிகர், அக்டோபர்-21
ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில், கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர். காலை 10 மணி நிலவரப்படி, ஹரியானாவில் 8 புள்ளி 7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 90 தொகுதிகளை கொண்டுள்ள ஹரியானா மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியிருப்பதால், பலமுனை போட்டி உருவாகியிருக்கிறது. ஆயிரத்து 169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கர்நால் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். சைக்கிளில் வந்த ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், ஏற்கனவே, தோற்றுவிட்ட காங்கிரஸ் கட்சி, ஒருபோதும் வெற்றிபெறாது என்றார்.