சட்டசபைக்கு குட்கா எடுத்துச்சென்ற வழக்கில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீஸூக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை, அக்-13

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்காக, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் குட்கா பொருட்களை எடுத்து சென்றார்கள். இது தொடர்பாக உரிமைக்குழு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு முதலில் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டது.

இதன் பின்னர், இறுதி விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அந்த உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் அடிப்படை தவறுகள் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி அந்த நோட்டீசை ரத்து செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில், மீண்டும் உரிமைக்குழு கூடி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. அதில் கூடுதலாக குட்கா பொருட்களை எடுத்து சென்றது மட்டுமின்றி அவைக்கு குந்தகம் விளைவித்தது, அமளி ஏற்படுத்தியது என பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து, 2ம் முறையாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி புஷ்பா, இந்த நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து உரிமைக்குழு, சட்டமன்ற பேரவை செயலாளர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டது. நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நிறுத்தி வைக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. மேல்முறையீடு மனுக்கள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் 4 வாரத்தில் பதிலளிக்கவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *