முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் தகனம்..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சேலம், அக்-13

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93). சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பு காரணமாக அதிகாலை 1 மணியளவில் காலமானார். தகவல் அறிந்து சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமக தலைவர் சரத்குமார், தமாக தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மாநில தலைவர் முருகன், விசிக தலைவர் திருமாவளவன், கராத்தே தியாகராஜன், கி.வீரமணி உள்ளிட்டவர்களும் முதல்வரின் தயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினி காந்த் உள்ளிட்டோர் தொலைபேசியில் முதல்வர் பழனிசாமியை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் மறைந்த முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் உடல் வீட்டில் இருந்து மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. முகக்கவசம் அணிந்து உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். சிலுவம்பாளையத்தில் உள்ள மையானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *