எடப்பாடியாரை முதல்வர் வேட்பாளராக ஏற்காத கட்சிகள் அதிமுக கூட்டணிக்குள் இருக்கமுடியாது.. கே.பி.முனுசாமி அதிரடி..!!
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டுமே அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க முடியும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி, அக்-10

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான வேலைகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 7ம் தேதி அறிவித்தார்.
இருப்பினும் கூட்டணி கட்சிகளும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பார்களா என விவாதம் கிளம்பியது.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி, “தேசிய கட்சியோ, மாநில கட்சியோ அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் பழனிசாமியை ஏற்போரே கூட்டணியில் இருக்க முடியும். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாத கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்க முடியாது”, என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.