மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு!!!
மகாராஷ்டிரா, அக்டோபர்-21
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி 5.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் மொத்தம் 235 பெண் வேட்பாளர்கள் உள்பட 3,237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.9 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 96,661 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 152 தொகுதிகளிலும், சிவசேனா கட்சி 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சிகள் 12 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதேபோல, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன. காங்கிரஸ் 147, அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பகுஜன் சமாஜ் 262, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 101, மார்க்சிஸ்ட் 8, இந்திய கம்யூனிஸ்ட் 16 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் நீண்டவரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே, மனைவி உஜ்வாலா, மகள் பிரணி ஷின்டே ஆகியோர் சோலாப்பூரில் வாக்களித்தனர். அதேபோல மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அவரின் மனைவி காஞ்சனாவுடன் வந்து நாக்பூரில் வாக்களித்தார். மேலும் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, நடிகை லாரா தத்தா, நடிகர் அமீர் கான், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பாந்த்ரா மேற்கு தொகுதியில் வாக்களித்தனர். காலை 10 மணி நிலவரப்படி மாநிலத்தில் 5.17 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.