பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்களை கையாளும் முறை குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.
டெல்லி, அக்-10

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எப்ஐஆர் பதிவு செய்து தடயங்களை சேகரிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோரின் தகவல்களை பாதுகாத்து வைக்க வேண்டும்.நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படக்கூடாது.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விசாரணையின் போது தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்குகளை சரியான நேரத்தில் விசாரித்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய நேரத்தில் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.