சட்டசபை தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும்.. வைகோ அறிவிப்பு..!

சட்டசபைத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.

சென்னை, அக்-10

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது போல சட்டப்பேரவை தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இதை வைகோ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று பேட்டியளிக்கையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச்சின்னம் பெற்று போட்டியிடும். திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக உள்ளது. எந்தவிதமான கருத்து பேதத்துக்கும் இடமில்லை. பதவிகளுக்காக வாழவில்லை, லட்சியங்களுக்காக வாழ்கிறேன் என்பது லட்சக்கணக்கான என் தொண்டர்களுக்கு தெரியும். என்னை பற்றி ஒரு சில பத்திரிகைகள் நஞ்சை கக்குகின்றன. அதில் எழுதப்பட்டதில் எள்ளளவும் உண்மையில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு மரண அடியாக இருக்கும். திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக முதல்வர் ஆவார். பாஜக அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு திமுக திட்டமிட்டு சரியான பாதையில் செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனும் தனிச்சின்னத்தில் போட்டியிடபோவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *